
சென்னையில், கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், தங்க சங்கிலியைப் பறித்து சென்ற ஒருவனை, புதுச்சேரியில் கைது செய்துள்ளனர். மற்றொருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கடந்த 11 ஆம் தேதி அன்று கணவருடன், கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஜெயஸ்ரீயின் பின்புறமாக வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயஸ்ரீ அணிந்திருந்த 5 சவரண் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார். தங்க சங்கிலி பறித்தபோது, ஜெயஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
மனைவியின் தங்க சங்கிலியை பறித்து செல்லும் மர்ம நபரை ஜெயஸ்ரீயின் கணவர் துரத்திச் சென்றார். ஆனாலும், மர்ம நபர், தங்க சங்கிலியுடன் தப்பித்துவிட்டார்.
இது குறித்து, ஜெயஸ்ரீ, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையன் குறித்து துப்பு துலக்கினர்.
இந்த நிலையில், ஜெயஸ்ரீயிடம் இருந்து தங்க சங்கிலியைப் பறித்தது சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா மற்றும் சாலமன் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட சிவா, புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுச்சேரி சென்ற போலீசார் சிவாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சாலமனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.