ஸ்ரீவில்லி. ஜீயரை கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் மனு!

First Published Feb 13, 2018, 12:46 PM IST
Highlights
Srivilli. Jeeyar is to be arrested! Petition in the High Court!


ஸ்ரீவில்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீவில்லி. ஜீயரும், திருச்செங்கோடு காவல்துறையினரும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் ராஜபாளையத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. 

வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ஆண்டாள் சன்னதியில் கவிஞர் வைரமுத்து, நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதமும் இருந்து வந்தார். பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூறியிருந்தனர். இந்த நிலையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

ஜனவரி 26 ஆம் தேதி அன்று திருச்செங்கோடு கூட்டத்தில் பேசிய ஜீயர், ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச தெரியும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஜீயரின் பேச்சுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாமக்கல்லைச் சேர்ந்த வைரவேல் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், சடகோப ராமானுஜ ஜீயரின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த  மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், வைரவேலின் மனுவுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள், சடகோப ராமானுஜ ஜீயரும், திருச்செங்கோடு காவல்துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். 

click me!