வன விலங்குகளை வேட்டையாட சென்றவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வனத்துறை.! சுட்டது ஏன் வெளியான பகீர் தகவல்

By Ajmal Khan  |  First Published Oct 29, 2023, 11:11 AM IST

தேனி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த நபரை தடுக்க முயன்ற வனத்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்றதால், வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் என்பவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


வேட்டைக்கு சென்றவரை சுட்டுக்கொன்ற வனத்துறை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55).இவர் மீது ஏற்கனவே வன விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பான பல வழக்கு உள்ளது. வனப் பகுதிக்குள் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பிகளில் கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து,அதன் மூலம் வனப்பகுதியில் பல அடுக்குகளாக கம்பிகளை போட்டு, அதன் மீது மின்சாரத்தை பாய்ச்சி அவ்வழியாக வனவிலங்குகள் கடக்கும் போது அவற்றின் மீது மின்சாரத்தை பாயச்செய்து,அவை இறந்தவுடன் அதனை எடுத்து வந்து விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

 வன விலங்கு வேட்டை

இந்தநிலையில் நேற்று இரவு மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட சுருளியாறு மின் நிலையம் அருகே, தடை செய்யப்பட்ட வனப்பகுதியில்  வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த வனவர் திருமுருகன் மற்றும் வனக்காவலர் பென்னி ஆகியோர் திருமுருகனை தடுக்க முயன்ற போது, அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் வனத்துறையினரை  வெட்ட முயன்றுள்ளார். இதனால் வனவர் திருமுருகன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஈஸ்வரனை சுட்டதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உறவினர்கள் போராட்டம்

இதுகுறித்து வனத்துறை  உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாலை  3. 30 மணி அளவில் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிபதி சடலத்தை நேரில் பார்த்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  உயிரிழந்த ஈஸ்வரனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் தேனி மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர். 

மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்

இதற்கு பதில் அளித்த வனத்துறையினர். வனப்பகுதிகளில் அரிதாக நடக்கும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் குழு மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது, அதனால் தான் அவரது சடலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஈஸ்வரன் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி வன விலங்குகள் வேட்டை

 உயிரிழந்த ஈஸ்வரன் கடந்த 2016 ஆம் ஆண்டு ,ஸ்டாலின் என்பவருடன் இணைந்து இதேபோல வனப்பகுதியில் கொக்கி போட்ட போது மின்சாரம் பாய்ந்து ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலையம் மற்றும் வனத்துறையிலும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!