
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித்தொழிலாளி ஒருவர் தனது 2 வயது மகளை தலைகீழாக தூக்கி, தரையில் அடித்த சம்பவம் மன்னார்குடியில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, வேங்கைபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). கூலித்தொழிலாளியான வேல்முருகனுக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. குடித்துவிட்டு, மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்த வேல் முருகன் மனைவி அமுதாவுடன் தகராறு செய்துள்ளார். மதுபோதையில் தகராறு செய்து வந்த வேல்முருகன், ஒரு கட்டத்தில் தனது மகள் அவந்திகாவை தலைகீழாக தூக்கி அடித்துள்ளார்.
இதனால், குழந்தை அவந்திகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அமுதா போட்ட சத்தத்தால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்த அவந்திகாவை மீட்டனர்.
பின்னர், அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவந்திகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.