சுருக்கு வலையைப் பயன்படுத்த விதித்த தடையை திரும்ப பெற கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்...

First Published Jun 19, 2018, 10:38 AM IST
Highlights
Fishermen strike demanding withdrawal ban for knot net


கடலூர்

சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கு போட்ட தடையை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெறக் கோரி கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும், படகுகளில் கருப்பு கொடி ஏற்றவும் முடிவு எடுத்துள்ளனர். 

கடலூரில், சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் இரண்டு கிராம மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். 

அதன்பின்னர் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக தடை விதித்தது.  இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. 

இதனிடையே மீன்பிடி தடைகாலம் முடிந்து ஒரு சில மீனவர்கள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுவருகின்றனர். எனினும், சுருக்கு வலையைப் பயன்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்தின் தடை அமலில் இருப்பதால், மீனவர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கு போடப்பட்ட தடையை நீக்கி மீண்டும் அந்த வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் மீனவர்கள், அமைச்சர் எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து, 'சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரினர். மேலும், 'அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதனையேற்று 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அப்போது அங்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வந்தார்.

அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத், இந்தப் பிரச்சனை குறித்து அதிகாரிகள், மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்க இரண்டு நாள் கால அவகாசம் கேட்டாராம். இதனை மீனவர்கள் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற இருந்த கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்திலும், படகுகளில் கருப்பு கொடி ஏற்றி அமைதியான வழியில் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

click me!