விவசாயிகள் நீண்ட நாள்களாக காத்திருந்த நிவாரணத் தொகை இந்த மாதம் இறுதிக்குள் கிடைக்குமாம்...

 
Published : Jan 26, 2018, 07:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
விவசாயிகள் நீண்ட நாள்களாக காத்திருந்த நிவாரணத் தொகை இந்த மாதம் இறுதிக்குள் கிடைக்குமாம்...

சுருக்கம்

The farmers will have to wait for the long-awaited relief money by the end of this month ...c

கன்னியாகுமரி

ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றத.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார். அப்போது, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள்சேகர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அசோக்மேக்ரின், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டம் தொடங்கியதும் மழை அளவு விவரம், அணைகளில் நீர் இருப்பு விவரம், உரம், விதை இருப்பு விவரங்கள் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.

அதன்பின்னர் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட பயிர் பாதிப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசினர்.

அதில், "ஓகி புயல் பாதிப்பு காரணமாக ஏராளமான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி குமரி மாவட்டம் வந்தபோது, இந்த மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நமது மாவட்ட எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இந்த கருத்தை வலியுறுத்தினர். அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படுவதுபோல பலியான விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என கேட்டோம். அதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கேரளாவில் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இங்கு குறைவாக வழங்கப்படுகிறது. எனவே கேரளாவைப்போல இங்கும் தரவேண்டும்.

தென்னைக்கு இழப்பீடு தொகையும், பாதிப்பும் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. புயலில் விழுந்த தென்னை மரம் மட்டுமல்லாது, புயல் பதம் பார்த்ததில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுக்கவில்லை. இவற்றையும் கணக்கில் எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்.

ஓகி புயல் பாதிப்பு காரணமாக இப்போது விவசாயிகள் அனைவரும் தாமதமாக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீர் மார்ச் மாதம் 15-ஆம் தேதியுடன் நிறுத்தப்படும். இம்முறை தண்ணீர் திறப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும். ஏப்ரல் 15-ந் தேதி வரை தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஓகி புயலில் அழிந்துபோன பயிர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை. இருந்தாலும் அடுத்து பயிர் செய்வதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.3 இலட்சம் வரை 4 சதவீத வட்டியில் விவசாய கடன் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. ஆனால் இந்த உத்தரவை வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு புதிய வாழ்வாதார திட்டத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்ற கலெக்டரின் அறிவிப்பை செய்தித்தாள் மூலம் அறிந்தோம். இதுதொடர்பான விவரம் கேட்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்களுக்கே அது தெரியாத நிலை இருக்கிறது.

எனவே, புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர்களும், விவசாய குழுக்களின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய குழு அமைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்ய, தகவல் வழங்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இதில் முறைகேடு நடைபெறுமானால் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு இளம் விவசாயிகள் மற்றும் விவசாய ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

மலையோரத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட வனத்துறை அனுமதி தர மறுக்கிறது. வன சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கிறீர்கள்" என்பது போன்றபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி சங்க பிரதிநிதிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குத்தகை நிலங்களில் பயிரிடுபவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் 537 எக்டர் விவசாய நிலங்களும், 5467 எக்டர் தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டன. இவற்றுக்கு ரூ.10 கோடியே 14 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. வருகிற 31-ஆம் தேதிக்குள் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும்.

தென்னைக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது தொடர்பாக அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வழிவகை இருந்தால் அதுதொடர்பாக வனத்துறை அதிகாரியுடன் ஆலோசிக்கப்படும். முன்னோடி வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் முறையாக வங்கி கடன் வழங்க அறிவுறுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!