
தருமபுரி
தருமபுரியில் காட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்க்கச் சென்றவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரித்ததில் அவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் கள்ள உறவு இருந்ததை காவலாளார்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காவலாளர்கள் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது கோடுப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேட்டு என்கிற சின்னதம்பி (40). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி சேட்டு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சசிகுமார், கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நால்வருடன் கோடுப்பட்டி வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அன்றிரவு நீண்ட நேரமாகியும் சேட்டு மட்டும் வீடு திரும்பாததால் செல்வி, தனது கணவருடன் சென்ற நண்பர்களை விசாரித்துள்ளார். அப்போது, சேட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த செல்வி இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோடுப்பட்டி வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது நானாகுட்டப்பள்ளம் பகுதியில் சேட்டு உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கபப்ட்டது. அதன்பேரில் காவலாளர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சேட்டு இறந்துகிடந்த இடத்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது.
இதனால் மர்ம நபர்கள் சேட்டுவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று காவலாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து வனப்பகுதியில் கிடந்த நாட்டுத் துப்பாக்கியை காவலாளர்கள் கைப்பற்றினர். பின்னர், சேட்டுவின் உடலை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் சிவராமன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, சேட்டுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் கள்ள உறவு விவகாரத்தில் சேட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவலாளர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக அதேபகுதியைச் சேர்ந்த கணவன் - மனைவியை பிடித்து காவலாளர்கள் விசாரித்தபோது அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த இன்னொரு நாட்டுத் துப்பாக்கியையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.