15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் கைது; இரண்டு மாவட்டங்களில் கைவரிசை…

First Published Oct 5, 2017, 8:15 AM IST
Highlights
The famous thief who was arrested in more than 15 cases was arrested Listen to three districts ...


விழுப்புரம்

விழுப்புரம் மற்றும் காஞ்சீபுரத்தில் கைவரிசை காட்டி 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 45 சவரன் நகை மற்றும் முக்கால் கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாகுசேன் (29). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த மாதம் 15–ஆம் தேதி அவரது தாயின் சிகிச்சைக்காக வீட்டைப் பூட்டிவிட்டு புதுச்சேரிக்குச் சென்றார். மறுநாள் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 28 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் திண்டிவனம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தனிப்படை காவலாளர்கள் நேற்று முன்தினம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரைப் பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நடந்துச் சென்ற வாலிபர் ஒருவரை தனிப்படை காவலாளர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவன் காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் கஸ்தூரி நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் சுந்தரமூர்த்தி (32) என்பது தெரிந்தது. மேலும் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையில் ஷாகுசேன் என்பவரின் வீட்டில் 28 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் இவந்தான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவலாளர்கள், சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து 45 சவரன் நகைகள் மற்றும், முக்கால் கிலோ வெள்ளி பொருட்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரமூர்த்தியை கைது செய்து, நகையையும் பறிமுதல் செய்த திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளார் திருமால் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த மயிலம் காவல் ஆய்வாளர் பால்சுதர், சிறப்பு உதவி ஆய்வாளார் பாண்டியன், ஏட்டுகள் ஐயப்பன், ராஜசெல்வம், செந்தில்முருகன், பூபாலன், பரந்தாமன், சுந்தர்ராஜ், தீபன்குமார், எல்லப்பன், பாரதிதாசன், ஸ்ரீகாந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “தனிப்படை காவலாளர்களால் கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி பிரபல கொள்ளையன் என்பதும். அவன் திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி பகுதி மற்றும் சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவன் மீது சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, காவலாளர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுந்தரமூர்த்தி கைது செய்யப்பட்டு, அவனிடம் இருந்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

click me!