
துணிப்பை கேவலம் அல்ல, இயற்கையைக் கெடுக்கும் நெகிழியே கேவலம் என்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மாமல்லபுரத்தில் செயின் மேரீஸ் மெட்ரிக். பள்ளி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பள்ளித் தாளாளர் பி.லியோ டோமினிக் முன்னிலை வகித்தார். தனியார் தொண்டு நிறுவத்தின் இயக்குநர் பென்ஜமின் நேசமணி கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினர்.
இந்த பேரணியின்போது, “நெகிழியை ஒழிப்போம், சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்” “தவிருங்கள் தவிருங்கள் நெகிழியைத் தவிருங்கள்”, துணிப்பை கேவலம் அல்ல, இயறகையை கெடுக்கும் நெகிழியே கேவலம்” போன்ற முழக்கங்களை எழுப்பப்பட்டது.
கிழக்கு ராஜ வீதி டி.எம்.கே.சாலை, மேற்கு ராஜவீதி, பேருந்து நிலையம் வழியாகச் சென்ற பேரணி அர்சுணன் தபசு அருகே நிறைவடைந்தது.
அப்போது அங்கு தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை மாணவ, மாணவிகள் அகற்றி சுத்தம் செய்தனர்.
இதில், பள்ளி முதல்வர் சகாய பிருந்தா, ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.