
“முதல்வர் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் 'கள் ஒரு போதைப்பொருள்' என்று ஆதாரத்துடன் வாதிட்டு வென்றால், கள் இயக்கத்தை கலைத்துவிட்டு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்” என கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தற்போது, அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விஷம் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை விற்பனை செய்யக்கூடாது என இளைஞர்கள், வணிகர் சங்கங்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்தத் தருணத்தில் இளநீர், பழ ஜூஸ், நீரா போன்றவைகளை பாட்டில்களில் விற்பனை செய்கின்றனர். இவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
புதிய முதல்வர் பழனிசாமியை விரைவில் சந்தித்து, கள்ளுக்கான தடையை விலக்கக் கோருவோம்.
அவர் அனுமதி கொடுத்தால், மக்களுக்கு தரமான இயற்கை பானத்தை வழங்குவோம். அல்லது, முதல்வர், அவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் வந்து, 'கள் ஒரு போதைப்பொருள்' என ஆதாரத்துடன் வாதிடட்டும்.
அவ்வாறு வாதிட்டு வென்றால், கள் இயக்கத்தை கலைத்துவிட்டு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்” என்று அவர் கூறினார்.