
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஐட்ரோ கார்பன் திட்டத்தின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை போட்டும், துடைப்பத்தால் அடித்தும் ஊர்வலம் நடத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இது ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்களின் எட்டாவது நாள் போராட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டம் நேற்று எட்டாவது நாளை எட்டியது.
இந்தப் போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் ஐட்ரோகார்பன் திட்டத்தின் உருவப் பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நெடுவாசல் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து செருப்பு மாலை அணிவித்தும், துடைப்பத்தால் அடித்தும் இந்தத் திட்டத்துக்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பின்னர், போராட்டப் பந்தலில் உட்கார்ந்து ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தூக்கிப் பிடித்தபடி, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது, பெண்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு இந்தப் போராட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.