
ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்த கீ மேன் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியைக் காட்டி, ரயிலை நிறுத்தியதால் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாலாந்தரவை ரயில்நிலையம். அங்கு இன்று காலை ரயில்வே ஊழியர் (கீ மேன்) வீரப்பெருமாள் என்பவர் தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர், நடைமேடையின் மேற்குபகுதியிலிருந்து 30 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதி துண்டாகி விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்துள்ளார்.
இதனையடுத்து விரிசலை சரி செய்ய முயற்சித்த போது, அதற்குள் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் தூரமாக வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே உழியர் வீரபெருமாள், சமயோசிதமாக சிவப்பு துண்டை வீசிக்கொண்டு சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு ஓடி, ரயிலை நிறுத்தினார்.
இருப்பினும் விரிசல் ஏற்பட்ட பகுதியை ரயிலின் இன்ஜின் உள்ளிட்ட 2 பெட்டிகள் மிக மெதுவாக கடந்து நின்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்த விரைவு ரயிலானது 90 கி.மீட்டர் வேகத்தில் சென்றிருந்தால், ரயில் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சுமார் 10 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் பிஸ்பிளேட் பொறுத்தி சரி செய்யப்பட்ட பின்னர், அங்கிருந்து விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. விபத்து ஏற்படாமல் தவிர்த்த கீ மேன் வீரப்பெருமாளை வாலாந்தரவை கிராம மக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள், ரயிலில் வந்த பயணிகளும் பாராட்டினர்.
மேலும் படிக்க: உஷார் மக்களே!! இன்று 25 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்..