
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் குடிபோதையில் யானையிடம் சேட்டை செய்த லாரி ஓட்டுநரை யானை தூக்கி வீசியதால் ஓட்டுநர் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ளது செட்டிசார்விளை. இந்தப் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜான் சேவியர் (56). இவருடைய மகள் பிரசவத்திற்காக திருவட்டார் அருகே கண்ணனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் மகளை பார்ப்பதற்காக ஜான் சேவியர் வந்தார்.
மகளைப் பார்ப்பதற்கு வந்த ஜான் சேவியர் குடித்து இருந்தார். போதையுடனே, மகளைப் பார்த்தவிட்டு வீட்டுக்குப் புறப்பட வெளியே வந்தார் ஜான் சேவியர்.
அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வெற்றிடமாக உள்ள இடத்தில் வேர்கிளம்பியைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டு யானைகளை கட்டிப்போட்டு பராமரித்து வருகிறார்.
அதனைப் பார்த்த ஜான் சேவியர் போதையுடனே தள்ளாடியபடி யானைகளின் அருகில் சென்றார். இதை பார்த்த மக்கள் யானையின் அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், அதைக் காதில் வாங்காமல் அங்கு கட்டியிருந்த பெண் யானையின் துதிக்கையை தடவி கொடுத்தார். அப்போது, மக்கள் அவரை விலகி செல்லுமாறு சத்தம் போட்டனர். ஆனால், அவர் தொடர்ந்து யானையிடம் சேட்டை செய்து கொண்டேயிருந்தார்.
ஒருக்கட்டத்தில் ஜான் சேவியர் செய்த சேட்டை யானைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் யானை தன் துதிக்கையால் அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் ஜான் சேவியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.