
காஞ்சீபுரம்
வளரும் சமுதாயத்திற்கு தரமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு சாராயத்தை மட்டும் கொடுப்பதா? என்று காஞ்சிபுரத்தில் சாராயக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் முழக்கமிட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் சாராயக் கடைக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, தங்கள் பகுதியில் சாராயக் கடையை திறக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதனை மீறியும் சாராயக் கடையை கட்டும் பணிகள் தொடந்தன.
இதனால் சினம் கொண்ட மக்கள், பெண்கள், குழந்தைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை திரட்டிக் கொண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் சாராயக் கடை கட்டிடத்தை முற்றுகையிடுவதுதான் சரி என்று முடிவெடுத்தனர்.
அதன்படி நேற்று கையில் பதாகைகளை ஏந்தியவாறு சாராயக் கடை கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாராயக் கடையைத் திறக்கக் கூடாது என்றும் வளரும் சமுதாயத்திற்கு தரமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு சாராயத்தை கொடுப்பதா? என்று முழக்கங்களையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மக்கள் தெரிவித்தது:
“நாவலூர் பகுதியில் இருந்து தாழம்பூர் செல்லும் பிரதான சாலையில் மூன்று கல்லூரிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் நாள்தோறும் இந்த சாலை வழியாக ஏராளமானோர் செல்கின்றனர். சாராயக்கடை திறந்தால் மக்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படும். எனவே, இங்கு சாராயக் கடையை திறக்கக் கூடாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.