
சிகிச்சை வந்த தன்னை டாக்டர் ஆபாசமாக வீடியோ எடுத்ததாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண். வயது 29. இவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர், அருகில் உள்ள ஆர்.எம்.கிளினிக்-க்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை, டாக்டர் சிவகுருநாதன் (64) பரிசோதனை செய்துள்ளார். அந்த நேரத்தில், டாக்டர் சிவகுருநாதன், அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
டாக்டர், தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை உணர்ந்த அந்த பெண், இது குறித்து கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், டாக்டர் சிவகுருநாதனிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், டாக்டர் சம்பந்தப்பட்ட வீடியோவை அழித்து விட்டு மெமரி கார்டை வெளியே தூக்கி வீசியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட இளம் பெண் மற்றும் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், டாக்டர் சிவகுருநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் வைத்திருந்த 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை விசாரித்து வருகின்றனர்.