கோலாகலமாக நடந்த நம்ம மீனாட்சி திருக்கல்யாணம்…. பல்லாயிக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்றனர்….

 
Published : Apr 27, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
கோலாகலமாக நடந்த நம்ம மீனாட்சி திருக்கல்யாணம்…. பல்லாயிக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்றனர்….

சுருக்கம்

Meenakshi thirukkalyanam Madutai chitrai festivel

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம் கோலகாலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கி விட்டதாக ஐதீகம்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக வடக்கு ஆடி- மேற்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மேடை ரூ.20 லட்சம் செலவில் வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானை ஆகியோர் மணமேடையில் எழுந்தருளினர். அதன் பிறகு மீனாட்சியும், சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடைக்கு வந்ததும் திருமண சடங்குகள் தொடங்கியது.

குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும், வேடம்பூண்டு மாலை மாற்றிக்கொண்டனர்.


அம்மன்-சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டது. மணப்பெண் சார்பில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் நலுங்கு செய்தனர். சரியாக 9.25 மணிக்கு மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுதாலி அணிந்து கொண்டனர்.

அதன் பிறகு 5 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மன்-சுவாமி ஆகியோர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக 400 டன் ஏசி அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் உள்ளேயும், சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 20 இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.



இன்று இரவு அனந்த ராயர் பூப்பல்லக்கில் மாசி வீதிகளில் அம்மனும், சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். அப்போது மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கிறார்கள்.

சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள்  தேவேந்திரர் பூஜையுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
அதே நேரத்தில் அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 30-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!