
திருச்சி
திருச்சியில் டேங்கர் லாரி பயங்கரமாக மோதியதில் காரில் வந்த தலைமை ஆசிரியர் தம்பதியினர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டேங்கர் லாரி ஓட்டுநரை கைது காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம் அருகிலுள்ள மொரைஸ் சிட்டி ஐந்தாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாசன் லியோன் (55). இவரது மனைவி புனிதவதி (53).
இருவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். தனது குடும்ப சுபநிகழ்ச்சிக்காக உறவினர்களை அழைப்பதற்கு திருச்சியிலிருந்து கரூருக்கு நேற்று காலை காரில் புறப்பட்டுள்ளனர்.
பேட்டைவாய்த்தலை அருகே சிறுகமணி திருவள்ளுவர் நகர் பகுதியில் கார் சென்றபோது, எதிரே வந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தாசன் லியோன், புனிதவதி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேட்டவாய்த்தலை காவலாளர்கள் விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து மதுரை தெப்பக்குள் மேட்டுத்தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரத்தினம் மகன் தங்கத்தை (43) கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.