
தேனி
குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றுக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கடமலை – மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் கருமலைசாஸ்தாபுரம், அருகவெளி ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
போதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்ததால் இரண்டு கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மயிலாடும்பாறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ரூ.15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
ஆனால், இந்த பணிகள் முடிந்த பிறகும், கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே அந்த கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளை வளர்க்க முடியாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், "தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தி இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தை வெற்றுக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஜெகதீசசந்திரபோஸ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "இரண்டு கிராமங்களிலும் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர்கள் உறுதியளித்தனர். அதனை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.