ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கியதில் 20 வயது பெண் யானை இறப்பு…

First Published Nov 29, 2016, 11:10 AM IST
Highlights


மேட்டுப்பாளையம்,

 

சிறுமுகை வனப்பகுதியில் ‘ஆந்த்ராக்ஸ்’ கிருமி தாக்கியதால் 20 வயது பெண் காட்டு யானை இறந்துள்ளது.

கோவை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துவிடும்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன ஊழியர்கள் சுற்றுப் பார்வை சென்றனர். அப்போது வச்சினம்பாளையம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அதிகாரி இராமசுப்பிரமணியம், சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன், வன விலங்குகள் மருத்துவ நிபுணர் மருத்துவர் மனோகரன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து காட்டு யானையின் உடல் அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ‘ஆந்த்ராக்ஸ்’ கிருமி தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டு காட்டு யானை இறந்து இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து வன விலங்கு மருத்துவ பரிசோதனை பிரிவு அதிகாரிகள், “ஆந்த்ராக்ஸ் என்பது கால்நடைகளை தாக்கும் ஒருவித கிருமியாகும். வறட்சி, மற்றும் சீதோஷ்ணநிலை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கால்நடைகளை இந்த கிருமிகள் எளிதாக தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

சிறுமுகை வனப்பகுதியில் இறந்த யானை அந்த்ராக்ஸ் கிருமி தாக்கியதால் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த யானையின் உடல் கூறுகள், சென்னையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.

கோவை மண்டல வன பாதுகாப்பு அதிகாரி அன்வர்தீன் கூறியதாவது:- “சிறுமுகை வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துள்ளது. ‘ஆந்த்ராக்ஸ்’ கிருமி தாக்கியதால் அந்த காட்டு யானை இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த யானை இறந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இறந்த யானை, சிறுமுகை வனப்பகுதியில் ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது. ‘ஆந்த்ராக்ஸ்’ கிருமி பரவாமல் இருக்கவும் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அன்வர்தீன் தெரிவித்தார்.

காட்டு யானை இறந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

tags
click me!