
மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில், “கம்பனும் வைணவமும்” என்ற ஆய்வு நூலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்டு உரையாற்றினார்.
இந்த விழாவில் அவர் பேசிய சில கருத்துகள், இலக்கியத்தைத் தாண்டி தற்போதைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வு குறித்துப் பேசிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேசினார்.
"எனக்கும் தீபத்திற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியிலும் தீபம் ஏற்ற முடியவில்லை; வேண்டாம் என்று தடுத்து விட்டனர். பரவாயில்லை... தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் திருப்பரங்குன்றம் வழக்கு பற்றி நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை என்றாலும், அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தைத்தான் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே இருக்கும் 'தீபத்தூணில்' கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. நீதிமன்ற உத்தரவு மதிக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, போலீஸ் கமிஷனர் மற்றும் கலெக்டர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்ததோடு, தேவைப்பட்டால் சி.ஐ.எஸ்.எஃப் (CISF) பாதுகாப்புடன் தீபம் ஏற்றவும் ஆணை பிறப்பித்திருந்தார்.
தேரழுந்தூர் நிகழ்ச்சியில் நீதிபதி ஆற்றிய உரையில், கம்பராமாயணத்தின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்ட அதே வேளையில், தீபம் குறித்த அவரது கருத்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன.