
2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 125 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். திமுக அரசு 5% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் தழுவிய தீவிர தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: "திருப்போரூர் என்பது எப்போதுமே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை. 2026-இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
தீய சக்தியான திமுகவை வேரோடு அழிக்கவே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்தக் கட்சியைத் தொடங்கினார். அதுதான் அதிமுகவின் அடிப்படை லட்சியம். கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, மக்களை ஏமாற்றி வருகிறது."
"சமீபத்தில் கள்ளக்குறிச்சி அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக வெறும் 5 சதவீத பணிகளைத்தான் செய்ததாக எனக்கு சவால் விடுகிறார். ஆனால், அவர் பேசிய அதே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது அதிமுக அரசுதான் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது."
"மத்திய அரசிடம் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாகவே, 100 நாள் வேலைத் திட்டம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படுவதில்லை; வேலையும் முறையாகத் தரப்படுவதில்லை.
மக்களுக்கு நான் ஒரு உறுதியை அளிக்கிறேன், 2026-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த 125 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.