எண்ணூர் பகுதியில் அம்மோனிய வாயு கசிவையடுத்து உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கோரமண்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் வாயு கசிவு- பொதுமக்கள் பாதிப்பு
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணூர் பெரியகுப்பம் பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் அம்மோனிய வாயு கசிவு காரணமாக கோரமண்டல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, 26/12/2023 அன்று இரவு 11.30 மணி அளவில் ஆலை வளாகத்திற்கு வெளியே கரையோரத்திற்கு அருகே அம்மோனியா இறக்கும் சப்ஸீ பைப்லைனில் அசாதாரண சூழலை தெரியவந்தது.
வாயு கசிவு நிலை என்ன.?
இதனையடுத்து உடனடியாக அதனை கவனித்து பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது, மேலும் அம்மோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி, சிறிது நேரத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். அம்மோனிய வாயு கசிவின் போது , உள்ளூர் பகுதியில் உள்ள சில நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தொழிற்சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த வாயு கசிவு சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். கோரமண்டல் நிறுவனம் எப்பொழுதும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் அவசரகால திட்டத்தை முறையை கடைபிடிக்கிறது என கோரமண்டல் தலைவர் அமீர் அல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்