
பள்ளிபாளையம்
பள்ளிபாளையத்தில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராடியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என்று மக்கள் வேதனை அடைந்தனர்.
பள்ளிபாளையம் அருவங்காடு இலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சரிவர குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காததை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் அருவங்காடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் பெண்கள் வெற்றுக் குடங்களுடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள், காவலாளர்கள் விரைந்துச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.
அப்போது லாரி மூலம் தற்காலிகமாக தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும், பழுதான போர்வெல்கள் சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.