
மயிலாடுதுறை
தமிழகத்தை ஆளும் அதிமுகவுக்கும், எதிர்க் கட்சி தி.மு.க.வுக்கும் ஆதரவாக மக்கள் இருக்க மாட்டார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கண்டுப்பிடித்து தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
“வருகிற மே மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இந்த தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. முட்டுக்கட்டையாக உள்ளது. ஆனால், பா.ஜனதா கட்சி உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.
தமிழகத்தை ஆளும் கட்சி அதிமுகவுக்கும், எதிர்க் கட்சி தி.மு.க.வுக்கும் ஆதரவாக மக்கள் இருக்கமாட்டார்கள். தற்போது ஊழலுக்கு எதிராகதான் மக்கள் திரண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. ஏனென்றால் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழகத்தில் தற்போது ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை. பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. நாகரீகமான அரசியல் சூழ்நிலை இல்லை. இதனால் வலுவான தலைமை தமிழகத்திற்கு தேவை. அதற்கு பிரதமர் நரேந்திரமோடி துணை புரிவார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அதனை திணிக்கப்போவதில்லை.
மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவி வரும் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு பாஜக தீர்வு கொடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் அரசுகுமார், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர்கள் நாஞ்சில்பாலு, திருக்கடையூர் விஜயகுமார், மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.