
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 பேர் கொண்ட குழுவானது கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்பட்டு ஆன்மீக சுற்றுலாவுக்கு தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கும் சென்ற அக்குழுவினர், கடைசியாக பத்மநாபசுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் முன்பதிவு செய்து வந்த பிரத்யேக ரயில் பெட்டிகள், புனலூர்-மதுரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளது.
அந்த ரயில் பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இணைப்பு ரயில் மூலமாக சென்னை சென்று, அங்கிருந்து வேறு ரயிலில் அவர்களது பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலம் செல்லவிருந்தனர். இதனிடையே, இன்று அதிகாலை 5.15 மணியளவில் ஆன்மீக சுற்றுலா குழு வந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கு ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மதுரை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாளை காலை 9.30 மணியளவில், மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் விசாரணை தொடங்கவுள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!
சம்பவம் மற்றும் விஷயம் தொடர்பாக அறிந்தவர்கள் ஆதாரங்களை வழங்க விரும்பினால் டிஆர்எம் அரங்கில் அவற்றை வழங்கலாம். எழுத்துபூர்வமாக தெரிவிக்க விரும்புவர்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம், ரயில் சன்ரக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு எழுதலாம் என தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் பலியான பேரின் உடல்களையும் லக்னோவிற்கு கொண்டு செல்லும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. இன்று மதுரையிலிருந்து 3 ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை காலை விமானம் மூலம் லக்னோவுக்கு உடல்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.