
கிருஷ்ணகிரி
சூளகிரியில் நடைபெற்று வரும் அனைத்துத் திட்டப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், அவற்றை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கொம்பேம்பள்ளி, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, துப்புக்கானப்பள்ளி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஏரிகள் மராமரத்துப் பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமானப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகளை ஆட்சியர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொம்மேப்பள்ளி கிச்சன்னசெட்டி ஏரியில் மராமரத்துப் பணிகள் மேற்கொள்வது,
தியானதுர்கம் கிராமத்தில் ரூ.1.70 இலட்சத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமானப் பணிகளையும்,
அதனைத் தொடர்ந்து சேசையன் ஏரியில் ரூ.30 இலட்சத்தில் ஏரி மராமத்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும்,
பீர்ஜேப்பள்ளி ஊராட்சியில் ரூ.4 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு மற்றும் குழாய் புதைத்து குடிநீர் விநியோகப் பணிகளையும்,
உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.22.50 இலட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும்,
உத்தனப்பள்ளி ஊராட்சியில் ரூ.30 இலட்சத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளையும்,
உத்தனப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட தேவசானபள்ளி ஏரிக் கரைகளை உயர்த்தி மழை நீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்வது குறித்தும்,
உத்தனப்பள்ளி ஏரியில் ரூ.9.95 இலட்சத்தில் ஏரிக் கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும்,
துப்புகானப்பள்ளியில் 16 கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ.18 லட்சத்தில் புதிதாக தோண்டப்பட்டு வரும் திறந்த வெளிக் கிணறு பணிகளையும்,
மருதாண்டப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி சூளகிரி துரை ஏரிக்கு தண்ணீர் செல்வதையும் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்.
பின்னர், “சூளகிரி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்’ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் மாது, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி, உதவி பொறியாளர்கள் சுமதி, குமார், தமிழ்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வைத் தொடர்ந்து, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.