
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு மையத்தில் சர்வர் செயலற்றுப் போனதால், வேலைக்கு விண்ணப்பிக்க வந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 10 மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உள்பட்ட நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் 21 சத்துணவு அமைப்பாளர், 19 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 15 (நேற்று) மாலை 5.45 மணிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதன்படி, கடந்த 30-ஆம் தேதி முதல் தகுதியுள்ள பெண்கள் தங்களது சான்றிதழ்களை பதிவு செய்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்தனர்.
இறுதி நாளான புதன்கிழமை மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் காலை 10 மணி முதல் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், பதிவு செய்வதற்காக ஒரு கணினி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இறுதி நாள் என்பதால் கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சான்றிதழ்களை பதிவு செய்து, சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்றது.
மாலை வரை நடைபெற்ற இந்தப் பணிகள், கணினியில் ஏற்பட்ட சர்வர் பிரச்சனையால், சான்றிதழை பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும், ஒப்புகை இரசீது அளிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், மாவட்டத்தின் கடைகோடி கிராமத்திலிருந்து குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களும், கர்ப்பிணி பெண்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால் விண்ணப்பிக்க வந்திருந்த பெண்களின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் சென்று குடிநீர் தேடி அலைந்தனர்.
சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் இரவு 8 மணி வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.