
விருதுநகர்
தமிழகத்தில் கந்து வட்டி தொழில் செய்பவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மகேந்திரன் பங்கேற்க வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடையே கூறியது:
“தமிழக அரசு முடமாகி விட்டது. ஏனென்றால், சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மற்றும் சேதத்திற்கு சாதாரண மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது, நாட்டிலுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியான செய்தி. ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் நடவடிக்கையை எடப்பாடி கே.பழனிசாமி அரசு செய்திருக்கிறது.
நாட்டில் இதுபோன்று வேறெங்கும் நடந்ததில்லை. புகார் அளித்த ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது.
தென் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரியால் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கமலின் அரசியல் விமர்சனங்கள் சரியானவை. உடல்நிலை சரியில்லாத கருணாநிதியை மோடி சந்தித்ததில் எந்தவித அரசியல் மாற்றமும் ஏற்படாது.
மோடி அறிவித்த பண மதிப்பு இழப்பு கொள்கையே கந்து வட்டிக்கு வழி வகுத்தது. சிறு தொழில் நடத்தும் மக்களுக்கு, அரசாங்கம் வங்கி மூலம் கடன் வழங்கியிருந்தால், கந்து வட்டி பிரச்சனை வந்திருக்காது.
கேரளத்தில் கந்து வட்டி தொழில் நடத்தினால் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை. ஆனால், தமிழகத்தில் கந்து வட்டி தொழில் செய்பவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு” என்று தெரிவித்தார்.