
விழுப்புரம்
விழுப்புரத்தில் சாராயக் கடையை மூட ஆட்சியர் உத்தரவிட்டும் அதனை அலட்சியப்படுத்தி டாஸ்மாக் நிறுவனம் சாராயக் கடையை திறந்ததால் வியாபாரிகள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலை பெட்ரோல் நிலையம் அருகில் உயர் ரக சாராயங்கள் விற்பனை செய்யும் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
இந்தக் கடைக்கு சாராயம் குடிக்க வருபவர்களால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் அருகில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
எனவே, இந்த சாராயக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் முறையிட்டனர்.
அதன் அடிப்படையில் அந்தக் கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படியும், அதுவரை தற்காலிகமாக கடையை மூடுமாறும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதனை ஏற்று, நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் சாராயக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் சாராயக் கடையை வழக்கம்போல் திறக்கும்படி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததால் பகல் 12 மணிக்கு அந்தக் கடையை திறந்து மேற்பார்வையாளர், விற்பனையாளர் ஆகியோர் சாராய விற்பனையைத் தொடங்கினர்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மதியம் 2.30 மணியளவில் அந்த டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் சாராயக் கடையை உடனடியாக மூடுமாறு முழக்கமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளார் காமராஜ் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “டாஸ்மாக் சாராயக் கடையை உடனே மூட வேண்டும். இல்லையெனில் எங்களது போராட்டம் தொடரும்” என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து டாஸ்மாக் சாராயக் கடையை மூடுமாறு கடை ஊழியர்களிடம் காவலாளர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அவர்கள் மாலை 3 மணியளவில் கடையை மூடிவிட்டு அங்கிருந்துச் சென்றனர்.
அதன்பிறகு வியாபாரிகள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.