
விழுப்புரம்
பண மதிப்பு நீக்க நாளான இன்று கருப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த முடுவெடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் சரவணன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இத்தகைய பண மதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நவம்பர் 8-ஐ கருப்பு நாளாக கடைபிடித்து மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சிகளும் அழைப்பு விடுத்து இருக்கின்றன.
அதன்படி விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை 3 மணிக்கு இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
எனவே, விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா ஆகிய கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.