
பெரம்பலூர்
பெரம்பலூரில் அரசு சாராயக் கடை விற்பனையாளர் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டும், கற்களால் கொடூரமாகத் தாக்கிவிட்டும் அவரிடமிருந்து ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கத் தொகையை மூன்று மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
பெரம்பலூர் - செட்டிக்குளம் சாலையில், செஞ்சேரி பகுதியில் அரசு சாராயக் கடை ஒன்று செயல்படுகிறது. இந்தக் கடையின் விற்பனையாளராக மேலப்புலியூரைச் சேர்ந்த துரைசாமி மகன் முனீஸ்வரன் (41) பணிபுரிகிறார்.
இந்த நிலையில், சாராய விற்பனையை முடித்துவிட்டு விற்பனைத் தொகையான ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு மேலப்புலியூர் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுக்கொண்டு இருந்தார்.
செஞ்சேரி புறவழிச்சாலை அருகேயுள்ள இந்திராநகர் காலனி நுழைவு வாயில் பகுதியில் சென்றபோது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் விற்பனையாளர் முனீஸ்வரனை தடுத்து நிறுத்தினர். பிறகு அவரது கண்களில் மிளகாய் பொடியைத் தூவியும், கற்களால் கொடூரமாகத் தாக்கியும்விட்டு அவரிடமிருந்த பணப் பையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து முனீஸ்வரன் அளித்தப் புகாரின் பேரில் பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனீஸ்வரன் பணத்துடன் வருவதை நன்கு அறிந்த யாரோதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று கோணத்தில் காவலாளர்கள் விசாரிக்கின்றனர். மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.