
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொர் நடப்பதால், காவிரி பிரச்சனை குறித்து பேச தமிழக முதலமைச்சர் சந்திப்பு குறித்து முடிவெடுக்க முடியாது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் விசாரணையை முடித்து, வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 தினங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.அந்தக் கடிதத்தில், சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு 7 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டு இருந்தார்.
ஆனால் அதை ஏற்று தண்ணீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மறுத்து விட்டார். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, அனைத்து கட்சியினர், விவசாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று கர்நாடக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறும்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார். தமிழக முதலமைச்சரின் கடிதம் வந்துள்ளது. ஆனால் உடனே முடிவெடுக்க முடியாது என்று கூறினர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதால், தற்போது தமிழக முதலமைச்சர் சந்திப்பது குறித்து முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.