சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியே தொடர்ந்து உணவு தயாரிக்கும் என அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம்
தமிழக அரசு சார்பாக பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள 350க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களின் மூலம் காலை உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதனை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில்,
தனியாருக்கு ஒப்பந்தம்- எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்
சென்னையில் சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது. காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருப்பதாக கூறியிருந்தார். மேலும் அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தனியாருக்கு வழங்கவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி விளக்கம்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு முதலமைச்சரால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் உடல் நலன் காத்திடவும். சோர்வின்றி கல்வி கற்றிடவும் ஏதுவாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 49,147 குழந்தைகளுக்கு 35 சமையல் கூடங்களின் வாயிலாக காலை உணவு சமைத்து வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
ஒப்பந்தம் ரத்து
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வெளி நிறுவனத்தின் வாயிலாக உணவு சமைத்து பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக காலை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்து. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 356 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு சமைத்து வழங்கும் பணியினை பெருநகர சென்னை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.