
கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. காவிரி நீரைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கிறது.
தற்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும், கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாரதிதாசன் மாதிரி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலாளர் அயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் லெனின், ஒன்றிய துணை தலைவர் ராஜீவ்மேனன், ஒன்றியக்குழுவை சேர்ந்த முகிஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.