
திருச்சி
அரசு பேருந்தில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் இருந்து 14 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சாந்தலிங்கம் (82). இவரது மனைவி தனலட்சுமி (73).
தனலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், தம்பதியினர் திருச்சி திருவானைக்கா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அடிக்கடி வந்து செல்வர்.
வழக்கம்போல, கடந்த 17-ஆம் தேதியும் மருத்துவமனைக்கு வந்த இவர்கள், சிகிச்சை முடிந்து அரசு பேருந்து ஒன்றில் அரியலூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அருகாமையில் உட்கார்ந்த மர்ம நபர் ஒருவர், தம்பதியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதில் இருதரப்பினரும் உணவுப் பண்டங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அந்த மர்ம நபர் சிலைஸ் குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த தம்பதியினர் மயக்கம் அடைந்திவிட்டனர். அதன்பிறகு என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லையாம். பேருந்து அரியலூருக்குச் சென்றபோது, மயக்க நிலையில் கிடந்த தம்பதியை நடத்துநர் தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காததால், அரியலூர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
பேருந்தில் வந்த மர்ம நபர், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துவிட்டு தம்பதியினர் அணிந்திருந்த 14 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சாந்தலிங்கம் அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப் பிரிவு காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.