சாராயக் கடையை அடித்து நொறுக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு…

First Published Apr 21, 2017, 9:42 AM IST
Highlights
The case against 10 people including the former panchayat leader


தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புதிதாக திறக்கப்பட இருந்த சாராயக் கடையை அடித்து நொறுக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 10 பேர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

தங்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமம், வயலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (44).

இவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் சாராயக் கடை ஒன்றைத் திறக்க கடந்த 18-ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், சாராயக் கடைக்கு எதிர்ப்பு வலுப்பதை போல இங்கும் எதிர்ப்பு தென்பட்டது.

இங்கு சாராயக் கடை அமைப்பதைக் கண்டித்து உள்ளிக்கடை, கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

“கிருஷ்ணாபுரத்தில் புதிய சாராயக் கடையை திறக்க கூடாது” என மக்கள் அனைவரும் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தின்போது புதிதாக திறக்கப்பட இருந்த சாராயக் கடையை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அடித்து நொறுக்கினர். இதில் ரூ.3 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் ரமேஷ், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலாளர்கள் உள்ளிக்கடை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.

புதிதாக திறக்கப்பட இருந்த சாராயக் கடையை சூறையாடியது தொடர்பான புகாரை திரும்ப பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தன்னை மிரட்டியதாக ரமேஷ், கபிஸ்தலம் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரையும் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

 

click me!