காளையர்களை தட்டித் தூக்கிய காளைகள்; சல்லிக்கட்டில் மாடு முட்டி 11 பேர் காயம்…

First Published May 25, 2017, 6:48 AM IST
Highlights
The bulls hammered by the bulls 11 people injured in cow dung ...


அரியலூர்

அரியலூரில் நடைபெற்ற சல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்களை, சீறிப் பாய்ந்த காளைகள் தட்டித் தூக்கி பதம் பார்த்ததில் 11 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது ஆங்கியனூர். இங்குள்ள, மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலமாக தெற்கு தெரு பகுதிக்கு எடுத்து வரப்பட்டது.  இங்குதான் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது.

முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஈடுகொடுத்து பாய்ந்து காளைகளை அடக்க முற்பட்டனர். அப்போது மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் திருமானூர், லால்குடி, தா.பழூர், ஜெயங்கொண்டம், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடி பதம் பார்த்தது. காளைகள் முட்டியதில் கருவிடச்சேரியை சேர்ந்த தனராஜ் (32), கீழகாவட்டாங்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (28) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுப்பிரமணியன் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருமானூர், செயங்கொண்டம் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சல்லிக்கட்டுப் போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.

விழாக் குழுவினர் மற்றும் ஆங்கியனூர் கிராம மக்கள் சல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

click me!