
தஞ்சாவூர்
காவிரியாற்றின் குறுக்கே 2016-17 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் உம்பளப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இளங்கார்குடி - மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்கே 2016-17 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் கட்டப்பட உள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைப்பெற்றது.
இந்த அடிக்கல் நாட்டுவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். தஞ்சாவூர் எம்எல்ஏ எம்.ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
பாலத்துக்கான அடிக்கல்லை நட்டுவைத்து கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்த தமிழக வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு .
பின்னர், இதுகுறித்து அமைச்சர் பேசியது:
“இந்தப் பாலம் இப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையில் அமையவுள்ளது.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை முக்கிய நகரங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும்.
வெளியூர் செல்வோர் இப்பாலத்தை பயன்படுத்தி சுமார் 7 கி.மீ. சுற்றிச் செல்வதை தவிர்க்க முடியும்.
இப்பாலம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுடையதாக அமைய உள்ளது” என்று கூறினார்.
இந்த விழாவில், முன்னாள் எம்எல்ஏ எம்.ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ். மோகன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.கோபிநாதன், வட்டாட்சியர் க.ராணி, ஒப்பந்தகாரர் இளவரசன், உம்பளப்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் செல்வராஜ், சிவகுமார், துணைத் தலைவர் மகேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.கே.கண்ணன், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.