
வாகன நெரிசலால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஆர்.கே.நகர் சாலை நேற்று விடுமுறை என்பதால் ஆளறவமற்று காணப்பட்டது. தெரு விளக்குகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்த அத்தருணத்தில் பைக் ஒன்று அதிவேகமாக சீறிப் பாய்ந்து வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது அசுர வேகத்தில் மோதியது.
இதனால் நிலைகுலைந்து போன இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.பைக் ஓட்டி வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர்.
அதேவேளையில் படுகாயமடைந்த மீனா மற்றும் யசோதா ஆகியோர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தலையின் பின்புறம் ஏற்பட்ட காயம் காரணமாக மீனா நேற்றிரவு சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
யசோதா என்பவருக்கு கை மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய இஸ்மாயில் மற்றும் பிரபு என்ற இரண்டு இளைஞர்களும் பைக் ரேஸில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் ஆர்.கே.நகர் சாலையில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகவும், ஆனால் இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து வருவதாகவும் உயிரிழந்த மீனாவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது போன்ற சம்பவங்களால் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பைக் பந்தயத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் போக்குவது காவல்துறையின் கடமை....!