
திருநெல்வேலி
திருநெல்வேலியில், நிச்சயித்த திருமணத்திற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் மணப்பெண் தனது தாய், தங்கையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. அவருடைய மனைவி சீதா (55). இவர்களுக்கு சொர்ணம் (30), பத்மா (20) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சொர்ணம் அங்குள்ள தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பழனி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சீதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
நேற்று காலையில் சீதா வசிக்கும் பகுதியில் தெருக்குழாயில் தண்ணீர் வந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக சீதாவின் வீட்டுக்கதவை அக்கம்பக்கத்தினர் தட்டினர். நீண்ட நேரம் ஆகியும் சீதாவின் வீட்டுக்கதவு திறக்கப்படாததால் . சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வாசுதேவநல்லூர் காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் நிகழ்விடத்துக்கு வந்த காவலாளர்கள் சீதாவின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. சீதா, அவருடைய மகள்கள் சொர்ணம், பத்மா ஆகிய மூன்று பேரும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல் அருகில் விஷ பாட்டில் கிடந்தது.
பின்னர், மூவரின் உடல்களையும் மீட்ட காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் பெண் தபால் அதிகாரி சொர்ணம், தன்னுடைய தாய், தங்கையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் காவலாளர்களின் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் வேல்சாமியை, சொர்ணம் காதலித்துள்ளார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அதன்பிறகு வேல்சாமிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதால் அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த சொர்ணம், தனது தாய், தங்கையுடன் விஷம் குடித்து உயிரை விட்டுள்ளார். மேலும் சொர்ணம் தனது கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளது.
அந்த கடிதத்தை வைத்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.