
கன்னியாகுமரி
ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவரின் உடல்கள் கேரளாவில் கரை ஒதுங்கியது. மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு மீனவர்களின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஏற்பட்ட ஓகி புயலில் சிக்கி, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். இதில் பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இம்மீனவர்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கேரள மாநில கடல் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது 20 க்கும் மேற்பட்ட மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட கேரளத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் உறவினர்களால் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மரபணு சோதனை மூலம் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒரு மீனவரின் உடல் குமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் வில்பிரட் (55) என்பது மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இரவிபுத்தன்துறை புனித கேத்ரின் தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும், கொச்சி ஆலுவா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மீனவர் உடல் புதுக்கடை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த அலக்ஸாண்டர் மகன் ஆல்பின் என்பதும், கோழிக்கோடு, வேப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த மீனவர் உடல் தூத்துக்குடியைச் சேர்ந்த தொபியாஸ் மகன் கிங்ஸ்டன் என்பதும் மரபணு சோதனை மூலம் நேற்று அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த பல்தாசன் மகன் சர்ஜின் (31), தூத்தூர் அகத்தம்மா குருசடிவிளாகம் அல்வாரி, சின்னத்துறை புனித நிக்கோலஸ் தெருவைச் சேர்ந்த கார்லோஸ் மகன் டார்வின் ஆகியோரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் அல்வாரி உடல் கோழிக்கோடு வேப்பூர் அரசு மருத்துவமனையிலும், சர்ஜின், டார்வின் உடல்கள் கொச்சி மருத்துவமனையிலும் இருப்பதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.