
திருநெல்வேலி
குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் படகு சவாரி தொடங்கியது. படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து விழுகிறது. சீசன் அருமையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையை அனுபவிக்க குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் படகு சவாரி நடத்தப்படும். அதேபோன்று இந்தாண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது.
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் உள்ள படகு குழாமில் இந்த படகு சவாரி நடக்கிறது. நேற்று படகு சவாரி காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. படகு குழாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் பிரபாகரன் எம்.பி. முன்னிலையில் படகு சவாரியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
தென்காசி உதவி ஆட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அனிதா, குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், மேலகரம் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நன்னை பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.
என்ன படகு இருக்கு?
படகு குழாமில் நான்கு இருக்கைகள் கொண்ட 20 பெடல் படகுகளும், இரண்டு இருக்கைகள் கொண்ட ஐந்து பெடல் படகுகளும், நான்கு பேர் செல்லும் ஐந்து துடுப்பு படகுகளும், தனிநபர் எடுத்துச் செல்லும் நான்கு துடுப்பு படகுகளும் என மொத்தம் 34 படகுகள் உள்ளன. படகுகளில் சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்புக்காக ‘லைப் ஜாக்கெட்‘ வழங்கப்படுகிறது.
கட்டண விவரங்கள்:
இரண்டு இருக்கைகள் கொண்ட பெடல் படகுகளுக்கு ரூ.120–ம், நான்கு இருக்கைகள் கொண்ட பெடல் படகுகளுக்கு ரூ.150–ம், நான்கு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகுகளுக்கு ரூ.185–ம், ஒருவர் மட்டும் எடுத்து செல்லும் துடுப்பு படகிற்கு ரூ.90–ம் அரை மணி நேரத்திற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.