நீலத் திமிங்கலத்துக்கு பலியானது என்னுடைய மகனோடு முடியட்டும் – கதறி அழுது விக்னேஷின் தந்தை வேண்டுகோள்…

First Published Sep 1, 2017, 7:47 AM IST
Highlights
The Blue Whale Death could finish With My Son - Father request...


மதுரை

உயிரை[ப் பறிக்கும் நீலத் திமிங்கல விளையாட்டிற்கு பலியாவது என்னுடைய மகனோடு முடியட்டும். இந்த விளையாட்டை அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று தந்தை கதறி அழுது வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்டத்தை அடுத்த விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்தவர் ஜெயமணி. பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ் (19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுபற்றி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்தபோது, ‘புளூ வேல்’ எனப்படும் நீலத் திமிங்கல விளையாட்டிற்கு அடிமையாகி, விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது

விக்னேஷ் தனது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்து இருந்தார். மேலும் அவருடைய நோட்டுப் புத்தகத்திலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார்.

அதில், ‘‘நீலத் திமிங்கலம். இது விளையாட்டல்ல விபரீதம். ஒருமுறை உள்ளே போனால், வெளியில் வர முடியாது’’ என்று எழுதி வைத்திருந்தார்.

இதனால் அவர் இணையதளம் வழியாக நீலத் திமிங்கல விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

விக்னேஷ் முதலாமாண்டில் நன்றாக படித்துத் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதற்காக அவருடைய பாட்டி சமீபத்தில் ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

விக்னேஷ் பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படித்து வந்தபோதும் சக மாணவர்களுடன் நட்புடன் பேசி பழகி வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் நீலத் திமிங்கல விளையாட்டிற்கு அடிமையானதில் இருந்து தனிமையை விரும்பி தனியாக காணப்பட்டதோடு விரக்தியிலும் இருந்துள்ளார்.

எப்போதும் பெற்றோர்களுடன் பாசமாக இருந்துவந்த விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையிடம் தகராறு செய்து முரண்பாடாக நடந்துள்ளார். அதேபோல அவரது எதிர் வீட்டில் உள்ள ஒரு குழந்தையிடமும் பாசமாக இருந்தவர், திடீரென அந்த குழந்தையை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் நீலத் திமிங்கல விளையாட்டு அவரது உயிரை குடித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் நீலத் திமிங்கல விளையாட்டுக்கு தனது உயிரை பறிகொடுத்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது.

காவலாளர்கள் விக்னேசின் செல்போன், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றி மேல் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

விக்னேசின் நண்பர்கள் யார், யார். அவர்கள் விக்னேஷ் போல நீலத் திமிங்கல விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி உள்ளார்களா? என்று காவலாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் விக்னேஷின் பெற்றோருக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது விக்னேஷின் தந்தை ஜெயமணி, “என் மகன் விக்னேஷ் நாங்கள் சொன்னபடி கேட்டு நடந்து வந்தான். என் வீட்டில் முதல் பட்டதாரியாக அவன் படித்து வந்தான். எதிர்காலத்தில் அரசுத் துறையில் உயர் பதவியில் வேலைக்கு சேர்ந்து எங்களுக்கு உதவியாக இருப்பான் என்று நினைத்தேன்.

ஆனால், அவன் உயிரையே பறித்த ‘புளூவேல்’ விளையாட்டில் எப்படி பழகினான் என்று தெரியவில்லை. செல்போன் மூலம் அவன் இந்த விளையாட்டில் ஈடுபட்டது எனக்கு தெரியாது.

உயிரை பறிக்கும் இந்த விளையாட்டுக்கு பலியாவது என்னுடைய மகனோடு முடியட்டும். இந்த விளையாட்டை இளைஞர்களோ, குழந்தைகளோ நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. யாருமே இனி இந்த விளையாட்டுக்கு உயிரை பறிகொடுத்து விடக்கூடாது.

இந்த விளையாட்டை அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினார்.

click me!