
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 157 மனுக்கள் வந்ததாகவும், அதில் 138 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 5 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் தென்னை இழப்பீடு, நிலக்கடலை பாதிப்புக்கு இழப்பீடு என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கதிரவன் பேசியது:
“பட்டா மாற்றம் செய்வது குறித்து ஆன்லைன் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையுடன் சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பசுமை குடில் சேதத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளர்கள். இதுகுறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய ஆணை வந்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயோகெமிக்கல் அனுமதியில்லாமல் விற்பனை செய்து வருவதை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆழ்துளை கிணற்றில் இருந்து சோலார் சிஸ்டம் அமைக்க மானியம் பெற தகுதியுடைய விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறையை அணுகலாம்.
விவசாயிகள் தேனீ வளர்ப்பு, நெல் நடவு மேற்கொள்ள இலகு நடவு எந்திரம் குறித்து கோரிக்கை வைத்துள்ளர்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனீ வளர்ப்பது மூலம் நல்ல ஈக்கள் உற்பத்தியாகும். அதன் மூலம் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அனைத்து சாகுபடியிலும் அதிக விளைச்சல் ஏற்படும். எனவே, விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.
தளி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் மின் விளக்குகள் பழுதுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த பகுதியில் நீர்நிலைகளில் ஏரி புறம்போக்கில் உள்ளவர்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்கி பிறகு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், வேளாண்மை துறை இணை இயக்குனர் கணேசன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகுமார், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகௌண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் கொடமாண்டப்பட்டி ரவீந்தராசு உள்பட பலர் பங்கேற்றனர்.