முன் விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பல்லடத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் கொடூர கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது வீட்டு முன்பு ஒரு சிலர் மது அருந்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் குமார் அந்த நபர்களை தட்டிக்கேட்டதால், மது போதையில் செந்தில் குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனை தடுக்க முயன்ற அவரது செந்தில்குமாரின் சித்தி புஷ்பவதி (68), தம்பி மோகன்ராஜ் (45) மற்றும் சித்தி ரத்தினாம்மாள் (58), ஆகியோரையும் அந்தக் கும்பல் மது போதையில் அரிவாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த கும்பல் ஓடி சென்றுள்ளனர்.
உடலை வாங்க மறுத்து பாஜகவினர் போராட்டம்
கொலை சம்பவம் நடைபெற்ற இடம் முழுவதும் இறந்தவர்களின் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் தனித்தனியாக சிதறி கிடந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட செந்தில் குமார், பொங்களூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியின் பாஜக கிளைத்தலைவராக இருந்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடல்களை பெறுவோம் என இறந்தவர்களின் உறவினர்களும், பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொலையாளி 4 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதான செல்லமுத்து என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் என்ன.?
இதனையடுத்து முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை பிடிக்க போலீசார் திருநெல்வேலி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இரண்டாம் நாளான இன்றும் பல்லடம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், 4 பேரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ், செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றுவதற்கு முன்னதாக கறிக்கடை நடத்தி வந்ததாகவும், அப்போது மோகன்ராஜ் மற்றும் வெங்கடேஷுக்கு இடையே பிரச்னை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் செந்தில் குமார் கள்ளக்கிணறு தண்ணீர் பந்தலில் எஸ்எம்ஆர் என்ற பெயரில் 'ரெஸ்டாரண்ட்' வைத்து நடத்தி வந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்டுக்கு எதிரில் வெங்கடேஷ் கோழி கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
முன் விரோதமா கொலைக்கு காரணம்.?
அப்போது ரெஸ்டாரண்டிற்கு கோழியை வெங்கடேஷ் கடையில் இருந்து செந்தில்குமார் வாங்கியுள்ளார். இதனையடுத்து அந்த ரெஸ்டாரண்டை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு செந்தில் விட்டிருந்துள்ளார். அப்போது கறிக்கடையில் கறி எடுத்து கடன் வைத்திருந்ததாக கூறி அந்த ரெஸ்டாரண்டில் இருந்த சிலிண்டரையும் கோழி கூண்டுகளையும் வெங்கடேஷ் எடுத்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மோதல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தான் செந்தில் குமாருக்கு சொந்தமான நிலத்தில் தனது கூட்டாளிகளோடு வெங்கடேஷ் மது அருந்தியுள்ளார். அப்போது செந்தில் குமார் மது அருந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டிற்கு சென்று அரிவாள்களை எடுத்து வந்து சரமாரியாக செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களை வெட்டி சாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.