
இசைஞானிக்கு பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை உருவாக்கி இசை ராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் இசை ரசிகர்களை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது 1970 தொடங்கி 2020 வரை தனது இசையால் மக்களை கட்டிப்போட்டவர் இளையராஜா, அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் தனி ரகம்..அந்த பாடல்களோடு இரவையும், சாலை பயணத்தையும் அனுபவிக்காமல் யாரும் இருந்தது இல்லை. அந்த இசைஞானி இளையராஜாவிற்கு இன்று 80 வயது தொட்டுள்ளது. இதனையொட்டி நேற்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இளையராஜா குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது இளையராஜா தனக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
இளையராஜாவிற்கு பாரதரத்னா விருது ?
இந்தநிலையில், முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவிற்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்! இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்! மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்! இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.