பலத்த மழையால் 4-வது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது…

 
Published : Sep 08, 2017, 07:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
பலத்த மழையால் 4-வது முறையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது…

சுருக்கம்

The 4th floor was flooded by heavy rains Traffic to 50 villages stalled ...

கிருஷ்ணகிரி

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அஞ்செட்டி தொட்டள்ளா ஆற்றின் தரைப்பாலம் 4-வது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதனால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்தது அஞ்செட்டி.  இங்கிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் தொட்டள்ளா ஆறு செல்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருவதால் அந்தப் பகுதியில் தற்காலிகமாக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தரைப்பாலத்தின் வழியாகதான் அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே வாகனங்கள் போக்குவரத்து நடந்து வந்தன.

கடந்த மே மாதம் குந்துகோட்டை, அருளாளம், காரண்டப்பள்ளி பகுதியில் பலத்த மழை பெய்ததால் வெள்ளத்தில் அந்தத் தரைப்பாலம் அடியோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தற்காலிக பாலம் உருவாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பெய்த பலத்த மழைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்பிறகும் ஒரு சில நாட்களில் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்ததால் தொட்டள்ளா ஆற்றில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் மீண்டும் உடைந்தது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒரு குழு அமைத்து தரைப்பாலம் அமைகப்பட்ட பகுதியில் முகாமிட்டு மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கினர். இதனால் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி, அஞ்செட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால் நேற்று மதியம் 2 மணியளவில், அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் தொட்டள்ளா ஆற்றின் மீதுள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் மக்கள். வாகனங்கள் சாலையின் இருபுறமும் முடங்கி நின்றன. நேற்று காலை அஞ்செட்டி சுற்று வட்டாரப் பகுதி மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில் மாலையில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாலத்தின் ஒருபக்கம் திணறி நின்றனர். ஒரு சில மாணவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாதோ என்ற கவலையில் அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  உடனடியாக ஒகேனக்கல் பகுதியில் இருந்து பரிசல்கள் அங்கு வரவழைத்தனர். அந்த பரிசல்கள் மூலமாக மாணவ, மாணவிகள் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை இந்த பணிகள் நடந்தது. தற்போது தொட்டள்ளா ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கேரட்டி, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சி, ஜேசு ராஜபுரம், பிலிகுண்டுலு என ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முடங்கியது.

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு