நாளை பதவியேற்கிறார்கள் புதிய 3 எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் அ.தி.மு.க. பலம் 136 ஆக உயர்வு

First Published Nov 23, 2016, 9:50 AM IST
Highlights


சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்கள், நாளை பதவியேற்கிறார்கள். இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 136 பேராக உயர்ந்துள்ளது.

கடந்த மே மாதம் 16ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல் உடல்நிலை பாதிப்பில் இறந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியாக இருந்தது.

தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியை விட 23,661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தஞ்சை தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் தக்கவைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் 42,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 136 ஆக (சபாநாயகர் உள்பட) உயர்கிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 3 பேருக்கும், சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்த பிறகு அவர்கள் எம்.எல்.ஏ.யாக செயல்படுவார்கள்.

செந்தில்பாலாஜி, ரெங்கசாமி, ஏ.கே.போஸ் ஆகிய 3 பேருக்கும், சபாநாயகர் ப.தனபால் நாளை பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

click me!