
நீலகிரி
கணவருக்கு கண்டம் இருப்பதாக கூறி இரண்டு பெண்களிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மூன்று குடுகுடுப்பைகாரர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் முதல் டிவிஷனில் அடுத்தடுத்துள்ள குடியிருப்பில் வசிப்பவர்கள் நாகவல்லி மற்றும் தனம்.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இரவு அப்பகுதிக்குச் சென்ற குடுகுடுப்பைகாரர்கள் இந்த இரண்டு பெண்களிடம் அவர்களின் கணவருக்கு கண்டம் இருப்பதாகவும், தோஷத்தை நீக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்தப் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் பகல் நேரத்தில் வந்த குடுகுடுப்பைகாரர்களிடம் கண்டம் நீங்க பூஜை செய்யுமாறு கேட்டனர். அதையடுத்து, தொடர்ந்து மூன்று நாள்களாக இரவு நேரத்தில் பூஜை செய்து, கடைசி நாளில் அந்தப் பெண்களின் தாலிச் சங்கலியை சொம்புக்குள்போட்டு 15 நாள்கள் கழித்து மீண்டும் தாலிச் சங்கலியை எடுத்து அணிந்துகொள்ளுமாறு கூறி குடுகுடுப்பைக்காரர்கள் பணம் பெற்றுச் சென்றனர்.
இந்த நிலையில், 15 நாள்களுக்குப் பிறகு இப்பெண்கள் சொம்புக்குள் பார்த்தபோது தாலிச் சங்கிலி இல்லாதது தெரியவந்தது.
இதுதெடர்பாக ஷேக்கல்முடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணிக்கு ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் நடந்து சென்ற மூவரைப் பிடித்து காவலாளர்கள் விசாரித்தபோது, அவர்கள் தாலிச் சங்கலி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.
இவர்கள், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த குடுகுடுப்பைகாரர்களான சுந்தரபாண்டியன் (26), விநோத்குமார் (22), சுரேஷ் (17) எனத் தெரியவந்தது.
அந்த மூவரையும் காவலாளர்கள் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.