
திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய ஆட்சியர் சுந்தரவல்லி, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளில் பத்து பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு நடத்தினார்.
மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி பார்வையிட்ட பின்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர், ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம், “இதுவரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 289 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுகிறது.
இவர்கள் மருத்துவமனையில் பத்து நாட்கள் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவரும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், குடும்ப நலம் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் தயாளன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரபாகரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ, மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.